Jagadguruvin Sollamudam

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35வது ஜகத்குருவாக விளங்கிய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் 1917ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி பெங்களூரு நகரத்தில் பிறந்தார். ஸன்யாசம் பெற்றுக்கொண்ட நாள் முதலாகவே குரு மற்றும் இறைவனுடைய நேரடி வழிகாட்டுதலுடன் அவர் தீவிரமான ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அவை 1935ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி அவரது ஆத்மஞானத்திலும் ஜீவன்முக்தியிலும் முடிவுற்றன. அப்பழுக்கற்ற நடத்தை, சீரிய பண்புகள், தீவிர வைராக்யம், ஆழ்ந்த இறை மற்றும் குரு பக்தி, வேதாந்தத்தில் புலமை, யோகத்தில் மேன்மை, ஜீவன்முக்தி ஆகிய இவையனைத்தும் தன்னகத்தே ஒருங்கே வாய்க்கப்பெற்றிருந்த குருநாதர், ஞானமடைந்த முனிவர்களைப் பற்றி சாஸ்திரங்களில் கூறப்படும் வாக்கியங்களுக்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். மிகுந்த கருணையுடனும் எவ்வித பாரபட்சமுமின்றி அனைவருக்கும் அணுகுவதற்கு எளியவராக விளங்கினார் குருநாதர். தன்னை நாடி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடைய துயரங்களைத் துடைத்து, அவர்களுக்கு இன்பத்தை அளித்து அருள் பாலித்தார் ஜகத்குரு. சிஷ்யர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் பதில்கள், ஜகத்குருவின் ஆன்மிகத் தெளிவுரைகள் மற்றும் கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. குருநாதரின் அருள்மொழிகள் மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருப்பதோடு மட்டுமின்றி அவருடைய ஆத்ம ஞானம், யோகத்தில் திறமை, சாஸ்திரங்களில் தன்னிகரற்ற புலமை ஆகியவற்றைப் பறைசாற்றுவனவாகவும் உள்ளன.அவரது சொல்லமுதம் பிறவிப்பிணியை வேருடன் அழிக்கும் அருளமுதம் என்பதில் ஐயமொன்றுமில்லை.

more...
...less